Saturday 10 November 2012

ரிஷிமுலம் : ஃப்ராய்டியப் பார்வை

 ஜெயகாந்தன் அனைவருக்கும் தெரிந்த உலகத்தரமான தமிழ் நாவலாசிரியர். நவீன நாவல், சிறுகதை தளத்தில் அவரின் பங்கு மதிப்பிட முடியாதவை. சமூகவியல் ஆய்வுக்கு மட்டுமின்றி உளவியல் ஆய்வுக்கும் ஏற்புடையவர் ஜெயகாந்தன் என்பது அவரை முழுமையாக அறிந்தவர்கள் அங்கீகரிப்பர். தமது கதைகள்  சமூகப் பிரச்சனைகளை மட்டும் கொண்டிருக்காது.. சராசரி மனிதனின் உளவியல் பிரிச்சனைகளையும் நுணுக்கமாக விவரிக்கும். இது நாவல்களுக்கு மட்டும் அல்ல சிறுகதைகளுக்கும் பொருந்தும்.. குறுநாவலுக்கும் பொருந்தும்.. அவற்றில் ரிஷிமூலம் ஒன்று..

வரலாறு, மேட்டுக்குடி மக்கள் பற்றிக் கதைகள் படித்துவந்த 60, 70 காலக்கட்டங்களில்  அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சிக்கல்களைக் கருப்பொருளாக்கி அவர் படைத்த இலக்கியங்கள் எளிய வாசகர்களைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை. யதார்த்தவாதியான ஜெயகாந்தன் தாம் படைத்த இலக்கியங்களில் சமூகச் சிக்கல்களை மட்டும் இன்றி உளவியல் சிக்கல்களை அலசும் கதைகளையும் படைத்துள்ளார். அப்படி அவர் படைத்த உளவியல் நாவல்களில் ஒன்று  ரிஷிமூலம் ஆகும். தமிழில் உளவியல் நாவல் முயற்சி மிகமிகக் குறைவு.  பாலியல் சிக்கலை மையமாக வைத்து ஜெயகாந்தன் படைத்த ரிஷிமூலம் அக்காலத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. பலரின் (மரபுவாதிகளின்) எதிர்ப்புக்கும் ஆளானார். அப்படி அவர் விவரித்தது என்ன? தாய் மீதான பாலியல் சிக்கலாகும். ஜெயகாந்தன் கதைகளில் பரபரப்பை ஏற்படுத்திய சிலவற்றில் ரிஷிமூலம் ஒன்று.. 1966 வாக்கில் வெளிவந்த இந்நாவல் எதிர்ப்புகளைச் சந்தித்தது.. காரணம் முன்பு கூறிய  கதைக்கரு.. தாய் மீதான பாலியல் எண்ணங்களால் ஒருவன் அலைக் கழிக்கப்படுகின்றான் என்பதை விளக்கும் உளவியல் நாவல் .  இது போதாதா எதிர்ப்புகள் தோன்ற..!  

ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வில்  இதை இடிபஸ் சிக்கல் என்பர். ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வைப்  படித்த மேலை நாவலாசிரியர்கள் சிலர்  அதை அடிப்படையாகக் கொண்டு உளவியல் நாவல்களைப் படைத்தனர். தமிழில் ஜெயகாந்தன் முயற்சித்தார். ஆனால் இதை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. நூலின் முன்னுரையில் இத்தகு விமர்சனத்தை மறுக்கவும் செய்தார். ரிஷிமூலம் வாசித்த எனக்கு அவரின் மறுப்பு வேடிக்கையாக இருந்தது. காரணம் கதையோட்டத்தில் ஆங்காங்கே உளப்பகுப்பாய்வு குறிப்புகள் காணப்படுகின்றன. ஃப்ராய்டை வாசிக்காமல் அவ்வாறு கூற முடியாது. குறைந்தபட்சம் இடிபஸ் சிக்கல் பற்றி அறியாமல் ரிஷிமூலம் படைத்திருக்க முடியாது என்பது எனது கருத்து. எனது இந்த ஆய்வில் ஃப்ராய்டிய எதிரொலிதான் ரிஷிமூலம் என்று அவரின் எழுத்துகளில் இருந்தே சான்றாக்குகிறேன்.. மேலும் கதை நாயகன் ராஜாராமன் என்பவன் ஜெயகாந்தனின் பிம்பம் என்று வாதிடுகிறேன்.. படைப்பாளி தன்னிலை அறியாதபடி  இடிபஸ் சிக்கல் (oedipus complex) தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறது.. அவ்வடிவம்தான் ரிஷிமூலம் . நம் கனவுகளும் இப்படித்தான்  வெளிப்படுகிறது.. ரிஷிமூலம் என்பது ஜெயகாந்தனின் கனவு.. அதில் வரும் ராஜாராமன் தான் சுயம்..

ரிஷிமூலத்தில் வரும் தலைமைப் பாத்திரமான ராஜாராமன் ஜெயகாந்தனின் குரல் (mouth  piece) என்பது என் முடிபு. இதை அவரின் எழுத்துகளில் இருந்தே சான்றுடன் ஆய்வு செய்துள்ளேன். அதாவது ஜெயகாந்தனின் இடிபஸ் சிக்கல் ராமராஜன் எனும் தலைமைப்  பாத்திரத்தைப் படைத்தது என்பது இவ்வாய்வின் முடிபு.

இந்தக் கட்டுரை மொ.இளம்பரிதி தொகுத்த    நாவல் : நவீனப் பார்வை எனும் தொகுதியில் (பக்.. 162-194) வெளிவந்துள்ளது.. காவ்யா வெளியீடு .

No comments:

Post a Comment