Wednesday 28 November 2012

உவர் சொல்லாடலாகப் பாழி

பாழி - தமிழில் வந்துள்ள பின் நவீன நாவல்களுள் முக்கியமான ஒன்று. இதன் உள்ளடக்கமும் சொல்லாடலும் சாதாரண வாசகனைத் திகைப்படையச் செய்யும். எளிதில் பிடிபடாத நாவல். இதை எழுதிய கோணங்கி தவிர வேறு யாருக்கும் இந்நாவலின் சாரம் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு கடினமான மொழிநடை கொண்டது இந்நாவல். இதுபோல் நவீனக் கவிதைகள் போல வந்துள்ளன. வாசகனைத் திகைப்படையச் செய்ய வேண்டும் என்பதற்காக மெனகெட்டு எழுவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. இது ஒரு பக்கம் உண்மை என்றாலும் அவ்வாறு எழுதுவது அவ்வளவு எளிதில்லை என்பதை அறியவும். இந்த நாவலைப் படித்தவர்கள் நான் கூறுவதை உணர்ந்திருப்பர். 

ஓர் எழுத்தாளன் வாசகனை எளிதில் அடைய விரும்புவது இயற்கை. மாறாக வாசகனுக்கும் தனக்கும் இடையே கடினமான மொழிநடையைத்  தடுப்புச் சுவராக எழுப்புவதற்குக காரணமென்ன. சத்தியமாக சமூகக் காரணம் இருக்க வாய்ப்பில்லை. எனவே உளவியல் காரணமாகத்தான் குழப்ப மொழிநடையில் சிலர் எழுதுகின்றனர். இந்தக்   கருதுகோளைக் கொண்டு செய்த ஆய்வுதான் இவ்வாய்வு. இந்த ஆய்வு நாவலின் உள்ளடக்கத்தை உளப்பகுப்பாய்வு செய்ய வில்லை. மாறாக மொழிநடையை ஆய்வு  செய்கிறது.  இத்தகு ஆய்வு தமிழில் இதுவே முதல்முறை. புதிது.

நாவலின் கற்பனை அல்லது உள்ளடக்கம் பற்றி உளப்பகுப்பாய்வு எசிய முற்படின் ஃப்ராய்ட் , யூங் , லக்கான் ஆகிய மூவரும் ஏற்புடையவராவர். மாறாக மொழி நடை உளப்பகுப்பாய்வுக்கு லக்கானே பொருத்தமாவார். காரணம், மொழிக்கு லக்கான் முதன்மை தருகிறார். மற்ற இருவரும் எண்ணங்களுக்கு சிறப்புத் தருகின்றனர். இந்த ஆய்வில் லக்கான் முன்வைக்கும் சொல்லாடல் பற்றிய கோட்பாடுகள் ஆய்வுக் கருவியாகப் பயன்படுத்தப் படுகின்றது. அவர் கூறிய இசிப்புச் சொல்லாடல் பாணியில் மேற்படி நாவலின் மொழிநடை இருப்பதை லக்கானியப் பின்புலத்துடன் விளக்கி உள்ளேன். படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையிலான ஊடாடல்கள் பாழி நாவலில் இசிப்பு நோய்த் தன்மியிலானவை என்பதை விவரித்துள்ளேன்.

இந்த ஆய்வு மொ.இளம்பரிதி தொகுத்த அண்மையப் புனைவுகள் நவீன வாசிப்புகள் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. மேலும், மாற்றுவெளி ஆய்விதழ் தமிழ் நாவல் சிறப்பிதழ் 1990-2010(திசம்பர் 2010) சிறுபத்திரிக்கையிலும் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment