Tuesday 4 December 2012

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் : சில இணைநிலைகள்

 ஒப்பிலக்கியம் - இலக்கியத்  திறனாய்வு முறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அணுகுமுறை ஆகும் இரண்டு இலக்கியத்திற்கு இடையே ஒப்பாய்வு செய்வது இதன் நோக்கம். என்றாலும் இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே ஒப்பீடு செய்வது கூட ஒப்பியல் ஆய்வு ஆகும். இதன் படி தொல்காப்பியத்தையும் ஃப்ராய்டியத்தையும் இவ்வாய்வு ஒப்பிடுகின்றது. கால, இட. துறை இடைவெளி இருந்தாலும் கருத்தியல் ரீதியில் சில ஒப்புமைகள் இரண்டுக்கும் இடையே இருப்பதை அறிந்ததன் விளைவு இவ்வாய்வு.  தொல்காப்பியத்தையும் ஃப்ராய்டியத்தையும் ஒப்பீடு செய்யும் போக்கு எனது எம்.ஃ பில் ஆய்விலிருந்து தொடங்கியது. உள்ளுறைப் பாடல்களை ஃப்ராய்டிய நோக்கில் ஆய்வதாக அந்த ஆய்வு அமைந்தது. அதன் நீட்சியாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

ஃப்ராய்ட் என்றால்  கனவுகள் நமது  நினைவுக்கு வரும். மிகவும் புதிர்மை வாய்ந்த கனவுகளை அறிவியல் பூர்வமாகப்  புரிந்துகொள்ள ஃப்ராய்ட் கண்ட இரண்டு அணுகுமுறைகள் பிரிச்சித்திப் பெற்றவை. அவை குறியீடு முறை மற்றும் குழூஉகுறி முறை ஆகும்.1900 காலக்கட்டத்தில் கண்ட இந்த அணுகுமுறை அறிவியல் உலகில் மிகவும் புகழ் பெற்றது. ஐன்ஸ்டின் கண்ட சார்பியல் கோட்பாடு, டார்வின் கண்ட பரிணாமக் கோட்பாடு, மார்க்ஸ் கண்ட மூலதனம் ஆகியவற்றிற்கு இணையாக வைக்கப் படும் கோட்பாடாக ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடு விளங்குகிறது. இது ஒருபுறம் இருக்க, தொல்காப்பியர் தாம் கண்ட இலக்கியக் கொள்கைகளில்  குறிப்புப் பொருள் கோட்பாடு (உள்ளுறை இறைச்சி ) ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடுகளுடன் இணைநிலையாக இருப்பதைக் கண்டு வியந்ததன் வெளிபாடுதான் இந்த ஆய்வு. ஃப்ராய்ட் கூற்றுப்படி,  கனவும் இலக்கியமும் ஒன்றே இந்த ஒப்புமையைத் தொல்காப்பியரிடமும்  காணமுடிகிறது. இந்த ஆய்வுப்படி, கனவுகளை ஃப்ராய்ட் எப்படி  அப்படியே தொல்காப்பியரும் இலக்கியத்தை அணுகினார். இவ்விருவரிடத்திலும்  அணுகுமுறைச் சிந்தனை ஒப்புமைகள் இருந்தன என்பதைப் பறைசாற்றும் முகமாக இவ்வாய்வு அமைந்துள்ளது.

மேலும் நவீனச் சிந்தனைகளான அழகியல்,இன்பக்கொள்கை, பரிணாமக் கொள்கை, மொழியியல் கொள்கை ஆகியவை தொல்காப்பியரிடத்திலும்  இருந்தன என்பதை முன்வைக்கவும் இவ்வாய்வு தவறவில்லை.

இந்த ஆய்வு தனி நூலாகவும் வெளிவந்துள்ளது. பார்க்க: தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் : அழகியல்  இணைநிலைகள்

No comments:

Post a Comment