Saturday 29 December 2012

நாட்டுப்புறவியலும் பெண்ணியமும் : லக்கானியம் முன்வைத்து..

நாட்டுப்புறவியலின் தாக்கம் ஏட்டிலக்கியம் முதல் நவீனத்துவம் வரைப் பரவலாக உள்ளன. எனவே ஓர் இலக்கியத்தை எப்படியெல்லாம் நவீன வாசிப்புக்கு உட்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் நாட்டுப்புறவியலையும் உட்படுத்த முடியும். பெண்ணியம் என்பது நவீனக் கோட்பாடுகளில் வலிமையானது. மனிதப் படைப்புகளில் கலைகளில் ஏன் அறிவியலில் கூட  ஆணாதிக்கம் ஒளிந்துகிடப்பதை கண்டெடுப்பது பெண்ணியமாகும். நாட்டுப்புறவியலின் வழக்காறுகள் நவீனச் சமுகத்திற்கு அடிப்படையாக இருப்பதால் அவற்றில் கூட ஆணாதிக்கம் பொதிந்திருக்கும் என்பது தெளிவே. நாட்டுப்புற ஆண்களை விட நாட்டுப்புறப்  பெண்கள் இரண்டாம்  பட்சமாகப் பார்க்கப் படுவதை அன்றாட வாழ்வில் நாம் காணலாம்.  நாட்டுப்புறவியலின் அனைத்துக் கூறுகளிலும் இதைக் காண முடியும். குறிப்பாக,வேலைக்கான கூலி நாட்டுப்புறப் பெண்களுக்குக் குறைவாகவே கொடுக்கப் படுகின்றது.

பல நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்களை இழிவாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன. பல பழமொழிகள் இதற்குச் சான்று. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு எனும் மொழி அனைவரும் அறிந்ததே. பல நாட்டுப்புறக் கலைகளிலும் விளையாட்டுகளிலும் இந்த நிலைகளைக் காணலாம். சமய நம்பிக்கைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். பேய்ப் பிடித்தல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கே இணைவிக்கும் போக்கு இருக்கிறது. இப்படி நாட்டுப்புறக்  கூறுகள் ஒவ்வொன்றிலும் பெண்கள் நிலை இரண்டாம் பட்சமாகவும் இழிநிலையிலும் வைக்கப் படுகின்றது. இதற்க்குக் காரணமென்ன என்பதை லக்கான் கண் கொண்டு காண்பதாக இவ்வாய்வு அமைகிறது.

பெண்ணியம் என்றதும் சில எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் நினைவுக்கு வருவர். உளப்பகுப்புப் பெண்ணியம் என்றதும் லக்கான் நினைவுக்கு வருவார். காரணம் பெண் ஏன் கீழ் நிலை ஆனாள் என்பதற்கான உளவியல் பின்னணியில் வரலாற்றை முன்வைத்தப் பெருமை லக்கானைக்  சாரும். அவரின் பெண்ணியக் கோட்பாடு கொண்டு நாட்டுப்புற வழக்காறுகளை ஆய்வு செய்துள்ளேன். நாட்டுப்புற சமுகத்தில் பெண் இரண்டாம் நிலையில் வைக்கப் படுவதால் அதன் தொடர்ச்சியான செவ்வியல் சமூகத்திலும் பெண் இரண்டாம் நிலையில் வைக்கபபடுகின்றனர். இன்று நாம் காணும் பெண்கள் நிலை நாட்டுப்புற வாழ்வியலின் தொடர்ச்சியே அன்றி புதிதாகத் தோன்றியது கிடையாது. இன்னும் நுணுக்கமாக நோக்கின் கற்காலச் சமுகத்தின் தொடர்ச்சியாகவும் காணமுடியும். ஆனால் நாட்டுப்புற சமூகத்தில் தான் வலினைபெற்றது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை லக்கான் துணைக்கொண்டு இவ்வாய்வில் முன்வைக்கின்றேன். ஒரு கருத்தரங்கத்தில் வழங்கிய இக்கட்டுரை ஒரு கட்டுரைத் தொகுதியில்  பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment